Thursday, 18 July 2013

தில்லை காளியம்மன் ஆலய வரலாறு


ஒரு முறை தேவ லோகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்படுகின்றது. அது நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா எனத் துவங்கிய சண்டை சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என பார்வதி வாதாடும் நிலைக்குப் போக கோபமுற்ற சிவபெருமான் பார்வதியை கோர உருவம் கொண்ட காளியாக மாறுமாறு சாபம் தந்து விடுகிறார். சிவனை விட்டுப் பிரிய மனமில்லாத பார்வதி அழுது புலம்பி தன்னை மன்னித்து விடுமாறு அவரை கேட்டுக் கொண்டப் பின் சாப விமோசனம் பெற்று மீண்டும் அவரை எப்படி அடைவது எனக் கேட்க அதற்கு சிவபெருமான் கூறினார் "இன்னும் சிறிது காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நீ இதே காளி உருவில் தேவர்களுக்காக போரிட்டு அசுரர்களை அழிப்பாய். அப்போது நீ தில்லை மரங்கள் சூழ்ந்த தில்லைக்கு வந்து என்னை நினைத்து தவம் இருக்க வேண்டும். அப்போது ஒரு கட்டத்தில் உன்னுடன் சேர்ந்து நடனமாடி உன்னை என்னுடன் மீண்டும் அழைத்துக் கொள்வேன்".
காலம் ஓடியது. தாரகாசுரன் என்ற அசுரன் தோன்றி தேவர்களை துன்புறுத்தி வரலானான். தேவர்களும் ரிஷி முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று அவன் தொல்லையில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் ஆலோசனைக் கேட்க அவர் காளி உருவில் இருந்த பார்வதியை அதற்கு அனுப்பினார். காளி உருவில் இருந்த பார்வதி யுத்தகளத்துக்குச் சென்றாள். தாரகாசூரனையும் அவன் சேனையும் அழித்தப் பின் வெற்றி அடைந்தாள். ஆனால் அவனை வெற்றி கொண்டபின்னும் அவள் கோபம் அடங்கவில்லை. வெறியாட்டம் போல ஊழித்தாண்டவம் ஆடத் துவங்கினாள்.
தாரகாசுரன் அழிந்தாலும் முனிவர்களின் தொல்லை தொடர்ந்தது. அவர்கள் சிவபெருமானிடம் மீண்டும் சென்று வேண்டினார்கள். அனைவரும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் தஞ்சம் அடைவது காளிக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளுக்கு சிவபெருமான் மீது கோபம் ஏற்பட்டது. அவரை விட தானே பெரியவள் என முன்னர் கொண்டு இருந்த எண்ணம் இன்னமும் குறையவில்லை. வெறியும் அடங்கவில்லை. அவளுடைய உக்ரஹத்தினால் அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் சொல்லொண்ணத் துயருக்கு ஆளாகினார்கள்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த வியாக்கிரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அவர்களுக்கு தில்லையில் திருநடனக் காட்சி தந்தார். அதை மெச்சி அனைவரும் அமர்ந்து இருந்த வேலையில் காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் யார் தோற்றாலும் அந்த ஊரின் எல்லைக்கு சென்று விட வேண்டும் என்பது நிபந்தனை. நடனம் துவங்கியது. அனைத்து தேவர்களும் கடவுட்களும் இசை ஒலிகளை எழுப்ப காளி மற்றும் சிவபெருமானின் நடனப் போட்டி தொடர்ந்தது. வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அனைவரும் திகைத்து நின்றபோது சிவபெருமான் ஊர்த்துவத் தாண்டவம் என்பதை ஆடிக் காட்டினார். அதில் அவர் தனது காலால் கீழே விழுந்த குண்டலத்தை எடுத்து காலை மேலே தூக்கி தனது காதில் அணிந்து கொள்ள அதே ஊர்த்துவத் தாண்டவத்தை பெண்ணான காளியினால் செய்ய முடியாமல் நாணம் தடுத்தது. பெண்ணினால் எப்படி காலை மேலே தூக்கிக் காட்டுவது? அதனால் போட்டியில் தோற்றுப் போனாள்.
போட்டியில் தோற்று போனதும் அவமானம் அடைந்தவள் ஊர் எல்லைக்குச் சென்று உக்ரஹமாக வட எல்லைக் காளியாக அமர்ந்தாள். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். சக்தி இல்லையேல் சிவனும் இல்லை. இருவரும் இணைந்து இல்லாதவரை பிரபஞ்சம் எப்படி இயங்கும் என கவலைப்பட அனைத்து தேவர்களும், மகாவிஷ்ணுவும் பிரும்மாவும் ஒன்று சேர்ந்து காளியிடம் சென்று அவளை சாந்தமடையுமாறு வேண்டிக் கொண்டனர். பிரும்மா அங்கேயே அமர்ந்து கொண்டு காளியை புகழ்ந்து வேதங்களை ஊதி அவளை பூஜிக்க அவர் பூஜையை ஏற்றுக் கொண்ட காளி பிரும்மசாமுண்டேஸ்வரி என்ற பெயரால் நான்கு முகம் கொண்ட சாந்தநாயகி ஆகி அதே இடத்தில் இன்னொரு சன்னதியில் சென்று அமர்ந்தாள்.
ஆக அந்த ஆலயத்தில் ஒரு சன்னதியில் உக்ரஹ காளி தேவியாக பல ஆயுதங்களையும் ஏந்திய எட்டுக் கைகளைக் கொண்ட தில்லைகாளியாகவும் இன்னொரு சன்னதியில் சாந்தமான நான்கு முக பிரும்மசாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களை ரட்சித்து வருகிறாள். காளி சொரூபத்தில் உள்ளவள் பில்லி சூனியப் பேய்கள், சினம், பகை, கொடிய வியாதிகள், ஆணவம், அகம்பாவம் போன்றவற்றை அழித்து வருகிறாள். சாந்தமான பிரும்மசாமுண்டேஸ்வரி கல்வி, ஐஸ்வர்யம் , வீரம் போன்ற அனைத்தையும் அளித்து வருகிறாள்.
இந்த ஆலயத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அதாவது 1229 AD மற்றும் 1278 AD ஆண்டுகளில் கோபெருங்ஜிங்கன் என்ற மன்னன் கட்டினான் என்று தெரிகின்றது. அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கத்தின்படி போரில் வெற்றி அடைவதற்காக தமது தலையையே தருவதாக வேண்டிக் கொண்ட படையினர் சிலர் போர்களில் வெற்றிப் பெற்றப் பின் அங்கு வந்து தமது தலைகளையே வெட்டிக் கொண்டு மரணம் அடைந்ததாக வாய்மொழிக் கதைகளும் உள்ளதாம்.
ஆலயம் மிகப் பெரியது அல்ல ஆனால் மிகப் பழமையானது. உள்ளே நுழைந்ததும் வலது பக்கத்தில் உள்ள தனி சன்னதியில் ஆனந்த நர்த்தனமாடும் விநாயகரும், இடதுபுற தனிச் சன்னதியில் முருகனும் கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு இருந்து கொண்டு பக்தர்களை காத்து அருளுகிறார்கள். முதல் மண்டபமான தியான மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் அலுவலக அறைகள் உள்ளன. தியான மண்டபத்தில் பக்தர்கள் நெய் விளக்குகளை ஏற்றி தேவிகளை ஆராதிக்க விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மண்டபத்தில் உள்ள சன்னதிகளில் நாம் காணுவது கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அமர்ந்து உள்ள தில்லைக் காளி அம்மனும் மேற்கு நோக்கி அமர்ந்து உள்ள பிரும்ம சாமுண்டியும் ஆவர்கள். அவர்கள் அங்கு அமர்ந்தவாறு பக்தர்களை ரட்சித்து கொண்டு உள்ளனர். அந்த மண்டப நுழை வாயிலில் இருபுறமும் பிரும்மாண்டமான காவல் தேவதைகள் நின்று கொண்டு உள்ளார்கள். சுவறுகளில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளைப் புடவையை மட்டுமே சாத்துகிறார்கள். தினமும் அவளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம். உடம்பு முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு ( அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்) வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது. தில்லை காளியை அந்த கோலத்தில் மட்டுமே தரிசிக்க முடிந்தது. (படத்தைப் பார்க்கவும்). அவள் சன்னதிக்கு பக்கத்திலேயே அவளை ஆராதித்து தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள விளக்கு பீடமும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த சன்னதியில் தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவள் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவளை வேண்டிக் கொண்டால்தான் பலன் உண்டு. ஆனால் அதற்கு மாறாக பிரும்ம சாமுண்டிக்கோ அனைத்து விதமான அலங்காரங்களும் செய்யப்பட்டு தேன், பால், போன்ற அபிஷேகங்களும் செய்யப் படுகின்றனவாம்.
அவள் சன்னதிக்கு பக்கத்தில் சுமார் ஆறு அல்லது ஐந்து அடி உயரமும் நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவும் கொண்ட மிகப் பெரிய நாகதேவர் சிலை உள்ளது. காளியை வணங்கியப் பின் அவரையும் வணங்க வேண்டுமாம். அதன் பக்கத்திலேயே போர் வீரர்கள் தமது தலைகளை வெட்டிக் கொண்டு பலி தந்தக் காட்சியைக் காணலாம்.
 

No comments:

Post a Comment