Monday 15 July 2013

தமிழகத்தின் மிகப் பெரிய பிஸினஸ் சமூகம்

நகரத்தார்கள் என்னும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இன்று தமிழகத்தின் மிகப் பெரிய பிஸினஸ் சமூகமாக விளங்குகின்றனர். தமிழ்நாட்டில் இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனமாக விளங்கும் சோழமண்டலத்தை நடத்தி வருபவர்கள் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். செட்டி நாடு குழுமமும் ஸ்பிக் நிறுவனமும் நகரத்தாரின் பிஸினஸ் திறமைக்குப் பெருமை சேர்க்கும் வேறு சில உதாரணங்கள். இவை தவிர, இன்னும் பல நிறுவனங்கள் தமிழகம் முழுக்க லாபகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்த வளர்ச்சியானது ஏதோ ஐம்பது, நூறு ஆண்டுகளில் வந்துவிடவில்லை. கடந்த பல நூற்றாண்டுகளாகவே பிஸினஸ் துறையில் நகரத்தார் சமூகத்தினர் தொடர்ந்து இருந்து வருவதாலேயேதான் இன்றைக்கு தலைசிறந்த பிஸினஸ் சமூகமாக இருக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்த சமூகம் கண்ட மிகப் பெரிய மாற்றமே இன்றைய நவீன பிஸினஸ் உலகில் முன்னணியில் இருக்கத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் தந்திருக்கிறது. அந்த வரலாற்றுப் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். 

பதினாறாம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்தது விஜய நகரப் பேரரசு. நாயக்க மன்னர்களின் நேரடி ஆட்சியில் இருந்த மதுரையை முகலாய மன்னர்கள் பிடித்தனர். ஆனால், தஞ்சாவூர் மட்டும் மராட்டிய மன்னர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது. இதற்கிடையே டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.


ஆட்சி அதிகாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம், பிஸினஸ் உலகிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, ஏற்றுமதி என்கிற புதிய விஷயம் வேகமாக நடக்க ஆரம்பித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கிரேக்கத்திற்குச் சென்று பொருட்களை விற்றுவிட்டு வந்ததாக சங்க இலக்கியங்கள் சொன்னாலும் பெரிய அளவில் இது வளரவில்லை. ஆனால், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு இங்கிருந்து பெருமளவிலான பொருட்களை கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக பல பொருட்களுக்கு புதிய தேவை பிறந்தது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது உப்பு. கடலை ஒட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் உப்பளங்கள் இருந்தன என்றாலும், ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை உள்ள உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் உப்பு இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இலங்கைக்கும் கொண்டு சென்று விற்கும் பிஸினஸ் சூடு பிடித்தது. இந்தத் தொழிலில் இறங்கி, ஒரு காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் நகரத்தார்கள்.

இதற்கடுத்து அரிசி வியாபாரம். நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தியான அரிசியை தென் மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கும், இலங்கைக்கும் கொண்டு சென்று விற்கிற பிஸினஸிலும் நகரத்தார்கள் பெரும்பங்கு வகித்தனர்.

ஆனால், இங்கிலாந்து நாட்டுக்காரர்களுக்கு இந்த பொருட்கள் மீதெல்லாம் அதிக நாட்டமில்லை. இங்கிருந்து அவர்கள் அதிகம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தது பருத்தியைத்தான். தமிழகத்தில் கோவை உள்பட பல பகுதிகளில் பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு நிறைய பருத்தி தேவையாக இருந்தது. பருத்தியை துணிகளாக நெய்யும் இயந்திரங்களையும் அவர்கள் உருவாக்கி இருந்தனர். இங்கிருந்து பருத்தியைக் கொண்டு சென்று, அதை துணியாக்கி மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விற்பதன் மூலம் பெரும் லாபம் சம்பாதித்தனர் ஆங்கிலேயர்கள். இந்த பருத்தி வியாபாரத்திலும் நகரத்தார்கள் முன்னணியில் இருந்தனர்.

1815-ல் மதுரையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரசிங்கம்பட்டியில் அர்ஜுன பெருமாள் அம்பலக்காரர் என்பவரின் வீடு இருந்தது. பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நகரத்தார்கள் இந்த வீட்டில் கூடினார்கள். இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, பருத்திகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான ஆர்டர்களை பெற்று வந்தார்கள். இப்படி செய்து வந்த வியாபாரத்தில் 743 வராகன்கள் லாபம் கிடைத்ததாக இங்கிருந்து கிடைத்த பனையோலைகள் சொல்கின்றன. இந்த லாப பணத்தை வைத்து நரசிங்கம்பட்டியில் பொதுக்கிணறு ஒன்றும் வெட்டப்பட்டது. இந்த கிணறானது 'நகரத்தார் ஊரணி’ என அழைக்கப்பட்டது.

இப்படி பல்வேறு பிஸினஸ்களை நகரத்தார்கள் வெற்றிகரமாகச் செய்துவர, அவர்களிடம் நிறைய பணம் சேர ஆரம்பித்தது. பிஸினஸுக்குப் போக மேலதிகமாக உள்ள இந்த பணத்தை வேண்டும் என்பவர்களுக்கு கடனாக தரும் வழக்கமும் நகரத்தார்கள் செய்ய ஆரம்பித்தனர். குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் பாதுகாப்புப் படைகளுக்கான செலவு செய்யவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்களிடம் கடன் வாங்கினார்கள். இந்த கடனை திரும்பத் தரமுடியாதவர்கள், தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட சில கிராமங்களையே கொடுத்தனர். ராமநாதபுர மன்னர் சேதுபதி வாங்கிய கடனை திரும்பத் தரமுடியாததால் சில மாகாணங்களை தந்ததாகச் சொல்கிறது வரலாறு.

இந்த காலகட்டத்தில் பர்மாவை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். பர்மாவுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொல்கத்தா வழியாக செல்ல ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து பர்மாவிலும் காலடி எடுத்து வைத்தனர் நகரத்தார்கள். 1870 முதல் 1930 வரையிலான 60 ஆண்டுகளில் தமிழகத்திலும் இலங்கை, பர்மா போன்ற வெளிநாடுகளிலும் நகரத்தார் பெரும் பணம் சேர்த்தனர்


No comments:

Post a Comment