Sunday, 14 July 2013

பட்டினத்தார் வரலாறு

காவிரிப் பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த நகரம். பிற்காலச் சோழர்கள் காலத்தில் கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்னும் வணிகர் ஞானகலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.  திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி செலுத்திய அந்த வணிகருக்குப் பிள்ளை பிறந்த போது திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமான் என்ற பெயரையே வைத்தார்.  திருவெண்காடர் எனவும் அழைக்கப்பட்டார். சிவநேசர் வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு பெரும்பொருளும் திரட்டி மன்னர்களுக்குச் சமானமான மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தார்.  மன்னரும் அவரை மதித்துப் போற்றி வந்தான்.  ஆகவே திருவெண்காடருக்கு நல்ல வசதியான வாழ்க்கை வாய்க்கப் பெறவே அவரும் மிகவும் ஆனந்தமாகவே வாழ்ந்து வந்தார்.  உரிய பருவத்தில் திருமணமும் ஆயிற்று. ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள்.  திருவெண்காடருக்கு சிவகலை என்னும் பெண்ணரசி மனைவியாக வாய்த்தாள்.  அவளுடன் நல்லறம் நடத்தி வந்தார். ஆனால் குழந்தைப் பேறே இல்லாமல் இருந்தது.  ஆகவே அங்கிருந்து திருவிடைமருதூர் சென்று ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார். அவ்வூரிலே சிவசருமர் என்னும் அந்தணர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார்.

அன்றாட வாழ்க்கைக்கு உரிய பொருள் இல்லா நிலையில் இருந்த அவரிடம் ஈசன் கருணை கொண்டு தாம் ஒரு குழந்தையாக அவர் முன் தோன்றுவதாகவும், “மருதவாணன்” என்ற பெயரைத் தமக்கு இட்டுத் தம்மை காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து திருவிடைமருதூர் வந்திருக்கும் திருவெண்காடர் என்னும் வணிகரிடம் கொடுக்குமாறும், அதற்கு அவர் பொருள் தருவார்;  அந்தப்பொருளை வைத்து வறுமையிலிருந்து மீளலாம் என்றும் கூறுகின்றார்.  அவ்வாறே ஒரு குழந்தையாக சிவசருமர் முன்னே தோன்ற, குழந்தையைக் கண்ட சிவசருமருக்கு அதைப் பிரிய மனம் இல்லை எனினும் வேறு வழியின்றித் திருவெண்காடரிடம் சென்று , ஈசனின் ஆணையைக் கூறிக் குழந்தையைக் கொடுக்கிறார்.  ஈசனின் ஆணை என்றதும் திருவெண்காடரும் குழந்தையை வாங்கிக் கொண்டு சிவசருமருக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து அனுப்பி விடுகிறார்.  குழந்தைக்கு மருதவாணர்  என்ற பெயரையே நிலைத்திருக்குமாறு செய்து குழந்தையோடு காவிரிப் பட்டினம் திரும்புகிறார்.

மேற்சொன்ன வரலாறு வேறுவிதமாகவும் கூறப்படும்.  செல்வத்திற்கு அதிபதியான குபேரனுக்கு ஞானம் கிட்ட வேண்டியும், மண்ணுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டியும் ஈசனை வேண்ட அவ்வாறே மண்ணுலகில் பிறக்க அருளுகிறார் ஈசன்.  ஆனால் குபேரனாயிற்றே.  செல்வத்துக்கு அதிபதி அல்லவா?  ஏழைக்குடும்பத்திலே பிறக்க முடியாது என்பதால் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள மிகப் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறக்கிறான் குபேரன். திருவெண்காடு சென்று பெற்றோர் பிள்ளைவரம் வேண்டிய பின்னர் பிறந்ததால் திருவெண்காடர் என்ற பெயரை வைக்கின்றனர்.  ஒரே சகோதரி இருக்கிறாள்.  திருவெண்காடருக்கு ஐந்து வயதாக இருக்கையில் தகப்பனார் இறந்து போக இவர் அதுமுதல் வணிகத்தைக் கவனித்து வருகிறார்.   ஒருநாள் இவர் கனவில் ஈசன் தோன்றித் திருவெண்காட்டிற்கு வரும்படி பணிக்க அங்கே செல்கிறார்.  அங்கே ஈசன் இவரை ஒரு அந்தணர் உருவில் வந்து சந்தித்துச் சிவ தீட்சை கொடுத்துவிட்டு ஒரு சம்புடத்தையும் கொடுக்கிறார்.  அந்தச் சம்புடத்துக்குள்ளாக விநாயகர் சிலையும், ஒரு சிவலிங்கமும் இருக்கவே நாள் தோறும் அதற்குப் பூஜைகள் செய்து வருகிறார்.  தக்க பருவம் வந்ததும் சிவகலையைத் திருமணம் செய்து கொள்கிறார்.  நாட்கள் கடக்கின்றன.  குழந்தை பிறக்கவில்லை.

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது.  சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், சிவசருமர் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் பெருவணிகராய் உள்ள திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் வறுமை தீரும் எனவும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவுகிறார்.  மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை.   பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார்.  வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார்.  வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர்.  ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ  ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான்.  கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார்.  அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது.  இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்!  எதைக்கொண்டு போகப் போகிறோம்.  எதுவும் இல்லை.

அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார்.  வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது.  அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர்.  இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர்.  தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார்.  அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார்.  இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர்  ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் "ஐயிரண்டு திங்களாய் "  என தொடங்கும்  பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது.  சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

 துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார்.  அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.  அவ்வூரில் பர்த்ருஹரி/பத்திரகிரியார் என்னும் அரசன் ஆண்டு வந்தான்.  அரண்மனையில் செல்வம் மிகுந்திருந்தது;  இது காட்டின் கொள்ளையர்களைக் கவர்ந்தது.  அவர்கள் அரண்மனைக்குக் கொள்ளையடிக்கச் சென்றனர்.  செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர்.  அவ்விதமே கொள்ளை வெற்றியாய்  முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் சந்நிதி முன் வீசிவிட்டுச் சென்றனர்.  அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது.

கொள்ளையரைத் துரத்தி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, நடந்தது எதையும் அறியாத பட்டினத்தார் பதில் சொல்ல முடியாமல் தவிக்க, காவலர்களோ, இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர்; இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர்.  மன்னனும் விசாரிக்கப் பட்டினத்தார் எதுவும் சொல்லவில்லை.  உடனே மன்னனுக்குக் கோபம் வந்து, “கள்வனைக் கழுவில் ஏற்றுக!” என்று ஆணையிட்டார்.  கழுமரம் தயார் செய்யப் பட்டது,  பட்டினத்தாரும் கழுவில் ஏற்றப் பட்டார். கழுவில் ஏற்றப்பட்ட நிலையிலும் மனம் தளராது, “விதியின் வலிமையை எண்ணி என் செயலாவது யாதொன்றுமில்லை, இனி தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்” எனத் தொடங்கும் பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது,  இதை அறிந்த அரசன் பட்டினத்தாரின் மகிமையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

அரசனைக் கண்ட பட்டினத்தாருக்கு அவனும் ஞான வழியில் செல்லப் பக்குவம் அடைந்திருப்பதும், அவன் மனைவி அவனை ஏமாற்றுவதும் தெரியவரவே அதை மன்னனுக்குச் சூசகமாக உணர்த்தினார். மன்னனும் மனைவியைச் சோதித்துப் பார்த்து அவள் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார்.  ராணியோ இறந்துவிடுகிறாள்.  அவள் அடுத்த பிறவியில் நாயாகப் பிறந்து ராஜா பத்திரகிரியாரையைச் சுற்றிச் சுற்றி வருகிறாள்.  பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர்.  அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார்.  தம்மைச் சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார்.  அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் ஒரு சித்தர் வந்து பிக்ஷை கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், “நானோ சந்நியாசி, என்னிடம் கொடுக்க ஏதுமில்லை.  அதோ இருக்கிறானே என் சீடன்.  சம்சாரி. சோற்றுச் சட்டி மட்டுமில்லாமல் கூடவே ஒரு நாயையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்.  அவனைக் கேளுங்கள்.” என்று கை காட்டி விடுகிறார்.

இதை அந்தச் சித்தர் வாயிலாக அறிந்த பத்திரகிரியார் ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது.”  அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார் பத்திரகிரியார்.  அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது.  அதைக் கண்ட பத்திரகிரியார் திகைத்து நிற்க பட்டினத்தார் தெளிவு படுத்துகிறார்.   பத்திரகிரியாரின் மனைவியே அந்த நாய் எனவும், இப்போது அவள் பாவம் தீர்ந்துவிட்டதென்றும், அடுத்த பிறவியில் நல்லதொரு அரசகுடும்பத்தில் பிறந்து மீண்டும் உன்னை நாடி வருவாள்.” என்று சொல்கிறார்.

 அதன்படியே அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து வருந்தியதாலும் நாய்ப் பிறவி எடுத்ததாலும் காசிராஜனுக்கு மகளாய்ப் பிறக்கிறாள்.  பேரழகு வாய்ந்த பெண்ணாள் வளர்கிறாள்.  அவளைத் திருமணம் செய்து கொள்ள மன்னாதி மன்னர்களும், இளவரசர்களும் போட்டி போட்டனர்.  காசிராஜனும் மகளுக்கு மணமகன் தேடவேண்டிச் சுயம்வரம் நடத்த ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான்.  ஆனால் அந்தப் பெண்ணோ சுயம்வரத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாள்.  தான் வேறொருவருக்குச் சொந்தமானவள் என்றாள்.  திருவிடைமருதூர் குறித்துக் கூறி அங்கே ஈசனோடு ஐக்கியமாகி இருக்கும் பத்திரகிரியாரைக் குறித்துச் சொல்லி அவரிடம் தன்னைச் சேர்ப்பிக்கச் சொல்கிறாள்.  மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான்.  பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான்.  தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

காசிராஜன் மகளும் தங்களின் அடிமையாகிய இந்த நாய் மீண்டும் தங்கள் திருவடி தேடி வந்திருக்கிறது என்று அவர் பாதம் பணிந்தாள். அவளுக்குத் தன் பூர்வ ஜன்ம நினைவுகள் மறையவே இல்லை என்பதைக் கண்டார் பத்திரகிரியார்.  பத்திரகிரியாரோ சிவஞானத்தில் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டார்.  அவர் இது என்ன புதுத் தொல்லை என நினைத்த வண்ணம் தன் குருநாதரான பட்டினத்தாரைப் போய்ப் பார்த்து, “குருவே,  இது என்ன?? நாய்க்குப் பிறவி ஞானம் வரலாமா?  மங்கையாய்ப் பிறப்பெடுத்து வந்திருக்கிறதே, “ என வினவ, “இதுவும் ஈசன் செயல்,” என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண் மட்டுமில்லாமல் பத்திரகிரியாரும் சேர்ந்து மறைந்தார்.  இருவரும் சிவஞானப் பெரும் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்தார். அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார்.  அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார்.  அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை.  பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் கரும்பு இனித்தது.  இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள்.  மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார்.  முக்தியும் பெற்றார்.  பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம்  காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்தார் சமூகத்தினரின் முக்கியமான கோயிலாகவும் விளங்கி வருகிறது.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு

உலகில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உருவான, வளர்ந்த ,தேய்ந்த வரலாறுகள் இருக்கும்.ஒவ்வொரு சமூகத்திலும் குறைகள்,நிறைகள் இருக்கும். குறைகளை எண்ணி வெட்கப்படுதலோ அன்றி நிறைகளை எண்ணி கர்வப்படுதலோ மனித அறியாமை.குறைகளும்,நிறைகளும் கொண்டவன் தானே மனிதன்.ஒரு தனிமனிதனுக்குள்ளேயே நூறு குறை,நிறை எனும் போது ஒரு சமூகத்தின் குறைகளுக்கு வெட்கப்படுவது அர்த்தமற்றது. அதனால் ஒரு சமூகம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது என் வரையில் ஒரு அறிவுத்தேடல். தமிழ் நாட்டின் ஒவ்வொரு சமூக மக்களும் ஒரு குறு நில மன்னனின் வம்சாவளிகளாக, அவர்கள் வழி வந்தவர்களாகத் தான் இருப்பார்கள் என்று என் ஐயா (தாத்தா) கூறுவார்கள்.உலக வரலாற்றைப் பாடம் படிக்கும் ஒவ்வொரு சமூக மக்களும் தங்களது வரலாற்றை அறிந்து கொண்டால் தமிழ்நாட்டின் வரலாறு கிடைத்துவிடும்..தமது பழம்பெருமைகளை அறிந்து கொண்டால் குறைகளை அகற்றி,நமது முன்னோர்களின் ராஜபாட்டையில் வழிதவறாது நாம் நடையிட இயலும். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை நான் வலைப்பூவில் இடுகையிடுவதன் காரணம் -- நகரத்தார் மக்களின் வரலாறின்றி எங்கள் சமூக வரலாற்றை எழுத முடியாதது ஒன்று.ஒரு சமூகத்தின் பின்புலத்தில் இப்படி ஒரு வரலாறா? என்ற திகைப்பும்,பிரமிப்பும் ஒரு காரணம்.கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள்.காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும்,எந்தச்சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது.இவர்கள் ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள்.கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது."நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்" என்ற குறளுக்கேற்ப தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக்கொண்டான்.தன வைசியர்களான இவர்கள் பொன்,ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது.ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப்போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது.வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது,2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டு சோழ நாட்டிற்கு வந்தார்கள். சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச்சோழன் என்னும் அறிவிற் சிறந்த நீதிமானானவன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு,மேற்கு,தெற்குத் தெருக்கள் ஒதுக்கிவிடப்பட்டு அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது.அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது.ஒரு கலையிலோ,தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும்,செல்வத்தில் யாருக்கும் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.1400 வருடங்களுக்குப்பிறகு சோழ வம்சத்திலும் ஒரு புல்லுருவி நகரத்தார்களுக்கு எதிராகத் தோன்றினான். பூவந்திச்சோழன் என்னும் அந்த அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும்,அவர்களது அனைத்துச்செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச்செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி செய்துகொண்டார்கள் என்று 'நாட்டுக்கோட்ட நகரத்தார் சரித்திரம்' கூறுகிறது.ஆனால் ஆச்சிமார்கள் கூறுகையில் பல தேசங்களுக்கும் கொண்டுவிற்கப்போன ஆண்மக்கள் திரும்பும் முன் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டான கடற்கோள் அழிவால் நகரத்தார் மக்களை கடல் கொண்டதாகக் கூறுவார்கள். ஒரு வேளை சிறியவர்களிடம் இந்தக் கொடுமைகளைக் கூற மனம் விழையாது மாற்றிக் கூறியிருக்கலாம்.ஒரு புத்தகத்தில் படித்த மனதை விட்டு நீங்காத ஒரு கருத்து. பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.சிலப்பதிகார நாயகன் கோவலன், நாயகி கண்ணகி குடும்பத்தினர்,பட்டினத்தார் ஆகியோர் நகரத்தார் சமூகத்தினரே!கலியுகம் 3808ம் ஆண்டில் பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.இளையாற்றங்குடியில் வாழ்ந்த நகரத்தார் மக்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமைக்குறைவால் 9 பிரிவுகள் ஏற்பட்டு ஒரு பிரிவிற்கு இளையாற்றங்குடிக்கோவிலும் மற்ற 8 பிரிவினர் தமக்குத் தனியாக கோவில் வேண்டி பாண்டிய மன்னனிடம் வேண்ட மன்னனும் அதற்கிணங்கி 8 பிரிவினருக்கும் மாற்றூர்,வைரவன்பட்டி,இரணியூர்,பிள்ளையார்பட்டி,நேமம்,இலுப்பைக்குடி,சூரைக்குடி,வேலங்குடி ஆகிய 8 ஊர்க்கோவில்களையும் அதற்குரிய க்ஷேத்திர சுவாத்தியங்களையும் விட்டுக்கொடுத்ததாக கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த 9 கோவில்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்டமான சிவ க்ஷேத்திரங்கள்.பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அருள்புரிவதில் உலகப் புகழ்பெற்ற கீர்த்தியாளர்.திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப பர்மா,ரங்கூன்,செய்கோன், மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மரக்கலங்களில் 'கொண்டுவிக்க'ச்சென்று, அங்கிருந்து பொன்,நவரத்தின மணிகள்,தேக்கு,அழகிய வேலைப்பாடுடைய கலைப்பொருடகள்,மங்குச்சாமான்கள்,இன்னும் எத்தனையோ பொருட்களை கப்பல்,கப்பலாகக் கொண்டு வந்து இறக்கியவர்கள் இந்த நகரத்தார் சமூகத்தினர். இந்த மக்களால் நாட்டுப் பொருளாதாரம் சிறந்தது மட்டுமன்றி இவர்கள் தொழில் கருதிச்சென்ற அயல் நாடுகளின் பொருளாதரத்தையும் பன் மடங்கு வளர்த்தவர்கள்.சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து, சமய உணர்ச்சியை பரப்பி, புராதனக் கலைச்செல்வத்தைப் போற்றி தமிழகத்தின் பண்டையப்பெருமை,பண்பாடுகளை பாதுகாத்து கால மாறுதலுக்கேற்பத் புத்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் தாமும் பொருந்திக்கொள்ளும் மனோபலம் மிக்கவர்கள்.மொழி, தேச அமைப்பு தெரியாத இடங்களில் கூட மனத்துணிச்சலுடன் கடல் கடந்து சென்று மனதில் கொண்ட காரியங்களை அற்புதமாக, சாமர்த்தியமாக சாதித்துக்காட்டியவர்கள் நகரத்தார்கள். தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் வரலாறு நாட்டவர் அனைவருக்கும் பயன்படும் ஒன்றாகும்.

Nagarathar

The Nagarathars . They are a community with very rich cultural heritage, known for their philanthropy; building temples and schools, and maintaining them throughout India and Asia. Chettiars are extremely intelligent and have strong values.

The Nagarathar is a Chettiar community in Shaivism that originated in Kaveripoompattinam under the Chola kingdom of India. They are a prominent mercantile Vaishya, caste in Tamil Nadu, South India.



They are a community with very rich cultural heritage, known for their philanthropy; building temples and schools, and maintaining them throughout India and Asia. Chettiars are extremely intelligent and have strong values. They were able to travel to foreign countries by boat, train, and by foot and set up businesses. They have built huge mansions, many with gorgeous tiles imported from Italy in the late 1800s and early 1900s.



These beautiful pieces of architecture can be found in Tamil Nadu. Even today, Nagarathars have formed Sangams in different countries where they meet, preserve their culture, the Tamil Language, built Thendhayuthapani Temples (Singapore, Rangoon, Moulmein, Mandalay and fifty other locations in Myanmar, Saigon, china town near saigon, Medan, Penang, Kuala Lumpur, Kulim, Valapur, ALor Setar, Sungu Rumbai, Jawi, Pera, Ipoh, Tanjong Malaim, Seremban, Melaka, Batu Pahat, Muar, and many more in Straits settlement and Malaya and donate monies for good causes. Now Nagarathars live in 52 countries.