இந்த மூர்த்தீயின் உருவ தத்துவத்தைச் சிறிது சிந்தித்து பார்த்தாலும் அதன் அருமை நன்கு புலப்படும். பிள்ளையாரை ஞானத்தின் அதிதேவதை என்பர் நூலோர் யானைத்தலையே அதற்குச் சான்று. ஓங்கார ஒலிக்குறிய வரிவடிவமான ஓம் என்பதை காட்புலனாகும்படி காட்ட யானைத்தலையே பெரிதும் ஏற்றதாயிருக்கிரது.வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெருவதன் மூலம் 'ஓ' என்ற எழுத்தின் தொடக்கச்சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல் நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று வலைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ் நோக்கி துதிக்கை நுனி வரைக் கோடிட்டால் 'ஓ' என்ற வரி வடிவம் தோன்றிவிடக்காண்போம். கையில் உள்ள மோதகம் 'ம்' என்ற வரி வடிவத்தை சுட்டுகிறது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் வலம்புரி பிள்ளையாராக இருப்பதால், பெரும்பாலான மற்ற இடங்கலில் உள்ள மூர்தங்களை விட விளக்கமாக இவ்வுண்மையை (ஓங்கார சொரூபத்தை) புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிள்ளையாரின் சிறப்பு

1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
4. வயிறு, ஆசனத்தில் படியாமல் "அர்த்தபத்ம" ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது.
5. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது.
6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.
7.ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.

ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும். இவற்றால் நாம் உணரக்கூடியது உணர வேண்டியது ஒன்று. பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தோன்றிய ஆதி நாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப் பெற்றிருக்கிறது என்ற உண்மை தான் அது.